திருப்பூரில் சமூக நலம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் ஆகிய துறைகளின் சார்பில் 100 பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
திருப்பூரில் சமூக நலம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் ஆகிய துறைகளின் சார்பில் 100 பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் தலைமை வகித்தார். பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசும்போது...
தமிழக அரசு பெண்களின் நலனில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. கர்ப்பிணிகள் தங்களையும், கருவில் வளரும் குழந்தையையும் ஆரோக்கியத்துடன் கவனித்துக் கொள்ள வேண்டும். இதற்காக தமிழக அரசு மகப்பேறு நிதியுதவி, முழுமையான மருத்துவ பரிசோதனைகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. கர்ப்பிணிகள் முறையாக தடுப்பூசி போட்டுக் கொள்ளவும், அவ்வப்போது மருத்துவ பரிசோதனைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
இதில் பங்கேற்ற 100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு தாம்பூலத்துடன், பூ, வளையல் ஆகியவை வழங்கப்பட்டன. மேலும், 5 வகையான உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலர் பிரதீப் கிருஷ்ணகுமார், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகள் மாவட்ட திட்ட அலுவலர் மரகதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.