ஈரோட்டில் உள்ள பெரியார் இல்லம் மற்றும் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திரிபுராவில் இடதுசாரி புரட்சியாளர் லெனின் உருவச்சிலை இடித்தது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, “ லெனின் யார்? அவருக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு. கம்யூனிசத்திற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு. இன்று திரிபூராவில் லெனின் சிலை.. நாளை தமிழகத்தில் ஈ.வெ.ராமசாமி சிலை” எனப் பதிவிட்டிருந்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்ப, தமிழகத்தின் எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் அனைவரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த சர்ச்சையை முற்றி வந்த நிலையில், திருப்பத்தூர் தாலுகா அலுவலம் முன் இருந்த பெரியார் சிலையை சிலர் சேதப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பாக திருப்பத்தூர் பாஜக நகரச் செயலாளர் முத்துராமன், பிரான்சிஸ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்யுள்ளனர்.
அத்துடன் ஒரு இருசக்கர வாகனமும் சிறை பிடிக்கப்பட்டுள்ளது. அந்த வாகனத்தில் பாஜகவின் சின்னத்தின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட முத்துராமன் பெயரும் ஸ்டிக்கரில் ஒட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஈரோட்டில் உள்ள பெரியார் இல்லம் மற்றும் பெரியார் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலைக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.