கவுதம் PT
தமிழ்நாடு

சென்னை: ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞர்... காப்பாற்ற முயன்ற நண்பன், ரயில் மோதி பலியான சோகம்!

மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்த நபரை காப்பாற்ற சென்ற நண்பன், ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

திருப்பத்தூரைச் சேர்ந்த சுவீத் என்பவர் சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்ல திட்டமிட்டிருக்கிறார். இதற்காக அவரை வழி அனுப்ப அவரது நண்பர்களான ஆசைத்தம்பி, கவுதம் உட்பட 4 பேர், திருப்பத்தூரிலிருந்து சென்னைக்கு கடந்த திங்கள்கிழமை (ஏப். 24) வந்துள்ளனர். சென்னை வந்த அவர்கள், விமான நிலையம் செல்வதற்காக அன்றிரவு 7 மணியளவில் பூங்கா ரயில் நிலையத்தில் இருந்து மின்சார ரயிலில் பயணம் செய்துள்ளனர்.

ரயிலானது, மாம்பலம் மற்றும் சைதாப்பேட்டை ரயில் நிலையம் இடையே சென்றுக் கொண்டிருந்தபோது, ஆசைத்தம்பி திடீரென ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதனைக் கண்டு பதறிப்போன அவரது நண்பர்கள் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில் நின்றவுடன், ஆசைத்தம்பியை காப்பாற்ற ரயில் தண்டவாளத்தில் ஓடியுள்ளனர். அப்போது கடற்கரை நோக்கி வந்த மின்சார ரயில், கவுதம் என்பவர் மீது மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

எனினும், ரயிலில் இருந்து தவறி விழுந்த ஆசைத்தம்பி லேசான காயத்துடன் உயிர் தப்பிய நிலையில் அவர் மீட்கப்பட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக மாம்பலம் ரயில்வே காவல்துறை வழக்குப்பதிவு செய்து, தண்டவாளத்தில் ஓடி உயிரிழந்த கவுதமின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நண்பரை காப்பாற்ற சென்றபோது ரயிலில் அடிப்பட்டு இளைஞர் உயிரிழந்த சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.