ஆசிரியர் மீது விசிக-வினர் புகார் pt desk
தமிழ்நாடு

திருப்பத்தூர்: மாணவரின் புத்தகத்தில் சாதி பெயரை எழுதியதாக ஆசிரியர் மீது விசிக புகார்!

திருப்பத்தூர் அருகே மாணவனின் புத்தகத்தில் சாதி பெயரை எழுதி வைத்த ஆசிரியரை பணி நீக்கம் செய்யக் கோரி விசிகவினர் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

PT WEB

செய்தியாளர்: சுரேஷ்

திருப்பத்தூர் மாவட்டம் குனிச்சிமோட்டூர் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அசோகன். இவருடைய மகன் ரித்திக் என்பவர் குனிச்சிமோட்டூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி ஆங்கில பாடம் நடத்த வந்த விஜயகுமார் என்ற ஆசிரியர், ஆங்கில பாடத்தில் இசைக்கருவி குறித்து பாடம் நடத்தியுள்ளார். அப்போது இசைக் கருவியை வாசிப்பவர்கள் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே என கூறியதாகவும், மாணவனின் புத்தகத்தில் பட்டியலின சாதி பெயரை எழுதி வைத்ததாகவும் கூறப்படுகின்றது.

மாணவனின் புத்தகத்தில் சாதி பெயரை எழுதிய ஆசிரியர்

இது குறித்த மாணவன் தன்னுடைய பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து கடந்த 19ஆம் தேதி பெற்றோர்கள் ஒன்றிணைந்து பள்ளியில் வந்து கேட்டுள்ளனர். அப்போது முறையாக பதில் அளிக்கவில்லை என்று கூறுகின்றனர். இதனை அறிந்த ஊர் பொதுமக்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இணைந்து ஆசிரியரை பணி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கூறி பள்ளியை இன்று முற்றுகையிட்டனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த திருப்பத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புண்ணியகோட்டி மற்றும் திருப்பத்தூர் வட்டாட்சியர் நவநீதம், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கந்திலி போலீசார் ஊர் பொதுமக்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் சமாதான பேச்சில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேலூர் மண்டல செயலாளர் சுபாஷ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு அளித்தார்.