இஸ்லாமியர்கள் புதியதலைமுறை
தமிழ்நாடு

மதுரை | மலை சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிட தடை.. போலீசாருடன் வாக்குவாதம்! நடந்தது என்ன?

மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது சிக்கந்தர் பாதுஷா தர்காவில் ஆடு கோழிகளை பலியிட்டு கந்தூரி வழிபாடு செய்ய தடை, தொழுகை வழிபாடு செய்ய மட்டுமே அனுமதி

PT WEB

மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது சிக்கந்தர் பாதுஷா தர்காவில் ஆடு, கோழிகளை பலியிட்டு கந்தூரி வழிபாடு செய்ய தடை, தொழுகை வழிபாடு செய்ய மட்டுமே அனுமதி - ஆட்டுக்கிடாயுடன் வந்தா இஸ்லாமியர்களை காவல்துறை தடுத்து நிறுத்தினர்.

மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்கா பள்ளிவாசலுக்கு கடந்த மாதம் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இஸ்லாமியர் ஆட்டுக்கிடாவுடன் கந்தூரி வழிபாடு நடத்துவதற்காக வந்திருந்தார். அப்போது காவல்துறையினர் மலை மீது ஆடு கோழிகளை பலியிடக் கூடாது என தடுத்து நிறுத்தியதால் திருப்பரங்குன்றம் பள்ளிவாசலை சேர்ந்த ஜமாத்தாருக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மறுநாள் எஸ்டிபிஐ, மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பாக அதற்கு கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

இந்நிலையில் இன்று காலை மலை மீது உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்கா பள்ளிவாசலில் கோழி, ஆடு பலியிட்டு சமூக நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக சமபந்தி விருந்து நடைபெறுவதாக வந்த தகவலை ஒட்டி திருப்பரங்குன்றம் மலை மீது செல்லும் கோட்டை தெரு பாதை அடைக்கப்பட்டது.

மேலும் மலை மீது தொழுகைக்கு மட்டும் அனுமதி என்றும் உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது என பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து திருப்பரங்குன்றம் பள்ளிவாசல் ஜமாத்தை சேர்ந்தவர்கள் காவல்துறையினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த நிலையில் மலை மீது உணவுப் பொருட்களை மட்டும் எடுத்துச் செல்வதற்கு அனுமதி வேண்டும் என்று ஜமாத்தார்கள் மாவட்ட வருவாய் அலுவலர் சக்தி வேலு, திருமங்கலம் வருவாய் கோட்டாச்சியர் ராஜகுரு ,மதுரை தெற்கு தாசில்தார் ராஜ பாண்டி உள்ளிட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்ததை அடுத்து மாவட்ட ஆட்சியரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சொல்வதாகவும் அதுவரை பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு மட்டும் செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இருந்த போதிலும் ஆடுகளை சுமந்தவாறு மலை மீது ஏற முற்பட்டனர். அவளை போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தையை நடத்தினர். இதற்கு முன்பாக இதுபோன்ற ஆடு கோழிகளை பலியிட்டு வழிபாடு செய்வதற்கான எந்த ஒரு ஆதாரங்களும் இல்லை என்றும் அதனால் வழிபாடு செய்வதற்கு மட்டுமே அனுமதி என கூறி திருப்பி அனுப்பி வைத்தனர். இதனால் சிறிது நேரம் திருப்பரங்குன்றம் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.