வேலை நிறுத்தப்போராட்டம்
வேலை நிறுத்தப்போராட்டம் புதிய தலைமுறை
தமிழ்நாடு

“ஒரு பஸ் கூட வரல...” - பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்யும் நிலை உள்ளதாக மாணவர்கள் ஆதங்கம்!

ஜெனிட்டா ரோஸ்லின்

நேற்று நள்ளிரவு முதலே தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் போக்குவரத்து கழகங்கள் சார்பில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்தினை பொறுத்தும் பேருந்துகள் இயக்கப்படும் எண்ணிக்கை குறைந்தும் அதிகரித்தும் காணப்படுகிறது. இருப்பினும் அதிகாரிகள், ‘பேருந்துகள் வழக்கம் போல இயங்குகிறது’ என்று கூறுவது மக்களிடையே சற்று குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது.

அந்தவகையில் நெல்லை மாவட்டத்தில் பேருந்துகளின் வரத்து என்பது வழக்கம் போல் இல்லாததால் வரும் ஒருசில பேருந்துகளில் தொங்கிக்கொண்டும், அடித்து பிடித்தும் செல்கின்றனர் அப்பகுதி மாணவர்கள். இதனால் தாமதமாக பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்லும் நிலையை மக்கள் அனைவருமே அங்கு எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக புறநகர் பேருந்துகள் போதிய அளவு இயக்கப்படாததால் தனியார் பேருந்துகளில் பயணித்து செல்லக்கூடிய சூழலும் பலருக்கு ஏற்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தினை பொறுத்த வரை 31 பணிமனைகள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நெல்லை மண்டலத்தில் 80 சதவீத பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்திலிருந்து தினமும் 700 முறை நகர மற்றும் புறநகர் பேருந்துகள் வழக்கமாக இயக்கப்படும். அது தற்போது வெகுவாக குறைந்துள்ளதென மக்கள் தெரிவிக்கின்றனர். தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக தற்சமயம் ஒவ்வொரு பேருந்துக்கும் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மாணவர் ஒருவர் தெரிவிக்கையில் “1 மணி நேரமாக பேருந்துக்காக காத்திருக்கிறேன். எந்தப் பேருந்தும் வரவில்லை. தற்போது கூட இந்த இடத்திற்கு வருவதற்காக தனியார் பேருந்தில்தான் வந்தேன்” என்றார்.

அரசு கூடுதல் பேருந்துகளை இயக்கினால் மட்டுமே நேரத்திற்கு தாங்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லமுடியும் என்று மாணவர்கள் கூறுகின்றனர். இதற்கிடையே இப்பகுதியில் தற்காலிக ஒட்டுநர்களை கொண்டு பேருந்துகள் இயக்கப்படுவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.