தமிழ்நாடு

பாலியல் வன்கொடுமை செய்து புதைக்கப்பட்ட பெண்.. 7 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்த உண்மை..!

பாலியல் வன்கொடுமை செய்து புதைக்கப்பட்ட பெண்.. 7 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்த உண்மை..!

webteam

நெல்லையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண் கொன்று புதைக்கப்பட்ட கொடூரம் 7 ஆண்டுகளுக்குப் பிறகு தெரியவந்துள்ளது.

நெல்லை லாலுகாபுரத்தைச் சேர்ந்த ஜெயராம் என்பவருக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரில் மணிகண்டன் மற்றும் ஆசீர்செல்வம் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையின் போது அவர்கள் தெரிவித்த தகவல் காவல்துறையினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. 2012ஆம் ஆண்டு ரெட்டியார்பட்டியைச் சேர்ந்த இளம்பெண்ணை கொன்று புதைத்ததாகக் கூறிய அவர்கள் அந்தக் கொடூரம் எப்படி நடந்தது என்பதையும் விளக்கியுள்ளனர். 

சேரன்மகாதேவியைச் சேர்ந்த சிவக்குமார், மணிகண்டன், ஆசீர்செல்வம் ஆகிய மூவரும் நண்பர்கள். ஆட்டோ ஓட்டுநராகப் பணிபுரிந்த சிவக்குமாரும் ரெட்டியார்பட்டியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் காதலித்ததாக தெரிகிறது. சிவக்குமார் முன்பே திருமணம் ஆனவர், அவரை காதலித்த பெண் விவகாரத்துப் பெற்றவர். திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அந்தப் பெண்ணை சிவக்குமார் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. 

மேலும் அவருக்கு மயக்க மருந்தை கொடுத்து தனது நண்பர்கள் மணிகண்டன் மற்றும் ஆசீர்செல்வம் ஆகியோர் பாலியல் வன்கொடுமை செய்ய சிவக்குமார் உதவியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தம்மை திருமணம் செய்து கொள்ளும்படி அந்தப் பெண் வற்புறுத்தியதால் நெல்லையில் அவருடன் ஒன்றாக வசித்துள்ளார் சிவக்குமார். சில நாள்களுக்குள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட, மணிகண்டன் மற்றும் ஆசீர்செல்வத்தை, சிவக்குமார் வரவழைத்துள்ளார். 3 பேரும் சேர்ந்து அந்தப்பெண்ணை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்ததுடன் அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர். 

பின்னர் உடலை தச்சநல்லூர் வாசுடையார் சாஸ்தா கோயில் அருகே புதைத்துவிட்டு ஏதும் நடக்காதது போல் சென்றுவிட்டனர். நெல்லையில் இருந்து மும்பை சென்ற சிவக்குமார் அங்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருவதாக மணிகண்டனும் ஆசீர்செல்வமும் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் அவரை பிடித்து நெல்லைக்கு கொண்டு வந்த காவல்துறையினர் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மூவரும் அடையாளம் காட்டிய இடத்திலிருந்து இளம்பெண்ணின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு கூராய்வு செய்யப்பட்டது. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்துள்ள இவ்விவகாரம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.