தமிழ்நாடு

திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்: பக்தர்களுக்கு அனுமதியில்லை

Rasus

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் கடற்கரையில் கூடி வெகு விமர்சையாக நடைபெறும் சூரசம்ஹார விழா, இந்தாண்டு கொரோனா அச்சம் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இன்றி நடைபெறவுள்ளது. ஒரு கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

‘கந்தனுக்கு அரோகரா' என்ற முழக்கம் விண்ணை பிளக்க ஆண்டுதோறும் திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா நடைபெறும். ஆனால் இந்தாண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 15 ஆம் தேதி யாகசாலையுடன் கந்த சஷ்டி திருவிழா தொடங்கியது.

விழாவின் உச்ச நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று நடைபெற உள்ளது. ஆண்டுதோறும் இந்நாளில் கடற்கரையில் சூரனை வதம்செய்யும் நிகழ்வை காண லட்சகணக்கான பக்தர்கள் திரண்டு பரவசம் அடைவர். அப்போது பக்தர் எழுப்பும் அரோகரா கோஷம் விண்ணை முட்டும். ஆனால் தற்போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்கள் இன்றி இன்று சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெறவுள்ளது. பக்தர்களுக்கு அனுமதி மறுப்பால் தங்களின் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர் திருச்செந்தூர் கோயிலில் கடை வைத்துள்ள வியாபாரிகள்.

சூரசம்ஹாரத்திற்கு மறுநாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. நிகழ்ச்சி முழுவதும் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோயிலை சுற்றி 2 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.