முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகின்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு வருகின்ற ஜூலை மாதம் 7ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதற்காக பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இதற்கிடையில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் தமிழில் கும்பாபிஷேக விழா நடத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்திருந்தார். மேலும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திருச்செந்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழில் கும்பாபிஷேகத்தை நடத்த தவறும் பட்சத்தில் கோயிலை முற்றுகையிடுவோம் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோயிலில் வருகின்ற 7.7.2015 அன்று காலை 6.15 மணி மேல் 6.50 மணிக்குள் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற உள்ளது. நன்னீராட்டு விழாவிற்காக 8000 சதுர அடி பரப்பளவில் 76 குண்டங்களுடன் பிரம்மாண்டமான வேள்விச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. வேள்விச்சாலை வழிபாடு நாட்களில் வேத பாராயணம் திருமுறை விண்ணப்பம் மற்றும் நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும்.
மேலும் காலை 7.00 மணி முதல் மதியம் 1 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை 64 ஓதுவார் மூர்த்திகளைக் கொண்டு பக்க வாத்தியங்களுடன் பன்னிரு திருமுறைகள், திருப்புகழ், மற்றும் கந்தர் அனுபூதி முதலான செந்தமிழ் வேதங்கள் முற்றோதுதல் நடைபெறும் என திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் கும்பாபிஷேக நிகழ்வில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிப்பதற்காக இந்த செந்தமிழ் வேதங்கள் அனைத்தும் 64 ஓதுவார் மூர்த்திகளால் முற்றோதுதல் செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
குடமுழுக்கு விவகாரம் தொடர்பாக அமைச்சர் சேகர் பாபு, “எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதுதான் முதல்வர் ஸ்டாலினின் கொள்கை; யாரும் சொல்லித்தான் தமிழில் குடமுழுக்கு நடத்தவேண்டும் என்றில்லை. திருச்செந்தூர் கோயிலில் தமிழிலும் குடமுழுக்கு நடத்தப்படும்; தமிழில் குடமுழுக்கு என்பது ஏற்கெனவே முடிவு செய்த ஒன்று. பழனி, மருதமலை கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, திருச்செந்தூரில் முருகன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தவேண்டுமென நாதக வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.