போலி ரெம்டெசிவிர் மருந்து கொடுத்ததால் டாக்டர் உயிரிழந்ததாக புகார் கொடுத்ததை தொடர்ந்து திண்டிவனம் தனியார் மருத்துவமனைக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் காந்தி நகர் சந்திப்பில் ஒரு தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனை தற்போது கொரோனா சிகிச்சை மையமாக செயல்பட்டு வருகிறது. நேற்று இந்த மருத்துவமனையில் தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர். ஆய்வுக்குப் பின் சிகிச்சையளிக்கும் விதிமுறைகளை முறையாக கடைபிடிக்காத காரணத்தால் இந்த தனியார் மருத்துவமனைக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன் கொரோனா சிகிச்சை மையமாக செயல்படவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தடை விதித்தனர்.
ஆய்வுக்கு பிறகு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் நிருபர்களிடம் கூறுகையில், ''இந்த மருத்துவமனை மீது புகார் வந்ததால் ஆய்வு நடத்தினோம். கொரோனா மருத்துவமனையில், ஒவ்வொரு நோயாளிக்கும் ஆக்சிஜன் கொடுக்கப்படுகிறதா, ரெம்டெசிவிர் மருந்து அளிக்கப்பட்டது உள்ளிட்ட சிகிச்சை விபரங்கள் அனைத்தும் முறையாக கையாள வேண்டும். இந்த மருத்துவமனையில், நோயாளிகளுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த எந்த விபரங்களும் தெளிவாக இல்லை. கொரோனா நோயாளிகளுடன் யாரையும் அனுமதிக்கக்கூடாது. அதை மருத்துவமனை நிர்வாகம் முற்றிலுமாக கடைபிடிக்கவில்லை. இதற்காக ஒரு லட்சம் அபராதம் விதித்துள்ளோம்.
கொரோனா பாதிப்பு குறித்த புள்ளி விபரங்களை அரசுக்கு சரியாக சமர்ப்பிக்கவில்லை. அதனால், இந்த மருத்துவமனை தொடர்ந்து, கொரோனா சிகிச்சை மையமாக செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள கொரோனா நோயாளிகளுக்கு மட்டும் உரிய சிகிச்சை அளித்து அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் உள்ள மருந்து, மாத்திரைகளை ஆய்வு செய்தோம். அதில், சில மாற்றங்கள் உள்ளது. போலி மருந்தால், ஒரு டாக்டர் இறந்து விட்டதாக புகார் வந்தது. அந்த டாக்டருக்கு, இந்த மருத்துவமனையை சேர்ந்த நபர் புதுச்சேரியில் இருந்து மருந்து வாங்கி கொடுத்தது ஆய்வில் தெரிய வந்துள்ளது. அது போலி மருந்தாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து போலீசில் புகார் அளிக்க உத்தரவிட்டுள்ளேன்'' என்று அவர் கூறினார்.
இந்த நிலையில் இன்று மேலும் ஒருவர் அதே மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். திண்டிவனம் அடுத்த வீரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் 15 நாட்களுக்கு முன்பு கொரோனா நோய்த்தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தெரிவித்தது. அதன் பின்னர் அவர்கள் உறவினர்கள் மருத்துமனையின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர், போலீசார் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து புகார்களை பெற்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.