தமிழ்நாடு

கோயம்பேடு மார்க்கெட்டிற்கு பைக்கில் வருபவர்களுக்கு நேரக்கட்டுப்பாடு..!

webteam

கோயம்பேடு மார்க்கெட்டிற்கு பைக்கில் வருபவர்களுக்கு நேரக்கட்டுப்பாடு விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இருப்பினும் ஊரடங்கு உத்தவை மீறி பெரும்பாலோனோர் வாகனங்களில் சுற்றித்திரிகின்றனர். தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 2,28,823 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1, 94,339 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 2,14,951 வழக்குகள் இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே சமூக விலகலை கடைபிடிக்க சென்னை மாநகராட்சி பல்வேறு உத்தரவு பிறப்பித்து வருகிறது. ஏற்கெனவே வெளியே வரும் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் எனவும் இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், தற்போது, கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு வரும் வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி கோயம்பேடு மார்க்கெட்டில் காலை 7.30 மணிக்கு மேல் வரும் இருச்சக்கர வாகனங்களுக்கு அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. காய்கறி, மலர்கள், வாங்க இருச்சக்கர வாகனத்தில் வரும் வியாபாரிகள் காலை 4 மணிமுதல் காலை 7.30 மணிக்குள் வரவேண்டும் எனவும் தடையை மீறி மார்க்கெட் வளாக பகுதிக்குள் வருபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் 3 மற்றும் 4 சக்கர வாகனங்களை கொண்டு வந்து காய்கறி வாங்க நேரக்கட்டுப்பாடு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.