வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்று ‘டிக் டாக்’ செயலியை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இளைஞர்கள் என்று மட்டும் இல்லாமல் வயது வித்தியாசங்களை தாண்டி இந்தச் செயலிகளுக்கான வாடிக்கையாளர்கள் கோடிக்கணக்கில் உள்ளனர். ஒரு பாடலையோ, இசையையோ, அல்லது வசனத்தையோ பின்னால் ஓடவிட்டு அதற்கு ஏற்றாற்போல் நடனமாடுவது, வசனம் பேசுவது, நடித்து காட்டுவது போன்றவற்றை இந்தச் செயலி மூலம் செய்யலாம்.
ஒரு பொழுதுபோக்கு அம்சம் என்பதையும் தாண்டி, அதற்கு பலரும் அடிமையாகி வருகின்றனர். மேலும், ஆபாசமான வீடியோக்கள் பலவும் இதில் உலாவுவதாக புகார்கள் எழுந்துள்ளன. சீன நிறுவனத்தின் டிக் டாக் செயலியைத் தடை செய்ய வேண்டும் எனப் பல்வேறு நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. தமிழகத்திலும் டிக் டாக் செயலி தடை செய்யப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
இந்த டிக் டாக் அப்ளிகேஷனில் பதிவு செய்யப்படும் வீடியோக்களை செல்போனில் பதிவிறக்கம் செய்து தேவையான சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து கொள்ளலாம். இந்த டிக் டாக்கில் பலர் தங்களது நடிப்பு திறமையையும் நடனத்திறமையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
பல நிறுவனங்களில் வேலைப்பார்த்து வருபவர்களும் அவர்களது அலுவலகங்களிலேயே ஓய்வு நேரங்களில் வீடியோ பதிவு செய்து வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் பணிக்காக வெளியூருக்கு செல்லும் பேரனுக்கு ஒரு கிராமத்து பாட்டி தனது சேலையில் முடிந்து வைத்த பணத்தை எடுத்து கொடுப்பது போன்ற வீடியோ டிக் டாக்கில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோவின் பின்னால் ராஜா ராணி படத்தில் தீம் மியூசிக் ஒலித்து கொண்டிருக்கிறது.
இந்த வீடியோ பார்ப்பவர்களை நெகிழ்ச்சியாக்கியுள்ளது. மேலும் இந்த வீடியோ ட்விட்டரில் தற்போது டிரண்டாகி வருகிறது.