தமிழ்நாடு

டிக் டாக் வீடியோவால் பிரச்னை: இரு பெண்கள் மீது போலீசில் புகார் கொடுத்த கிராம மக்கள்!

webteam

டிக் டாக் வீடியோ வெளியிட்டு பிரச்னை ஏற்பட்டதால் இரண்டு பெண்களை அக்கிராம மக்கள் ஊரை விட்டு தள்ளிவைத்து கட்டுப்பாடு விதித்துள்ளனர்.

தேனி மாவட்டம் நாகலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுகந்தி. இவர், தனது சகோதரியுடன் சமீபத்தில் டிக்டாக் செயலியில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்நிலையில், அந்த வீடியோவுக்கு பதில் அளித்த நபர் ஒருவர், சுகந்தி மற்றும் அவரது சகோதரியை விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில், சுகந்தி மற்றும் அவரது சகோதரியை கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்துள்ளார். அதுமட்டுமின்றி, நாகலாபுரம் கிராம பெண்களையும் தகாத வார்த்தைகளால் பேசி விமர்சனம் செய்துள்ளார். இந்த வீடியோ கிராமத்திற்குள் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவால் கோபமடைந்த நாகலாபுரம் கிராம பெண்கள், பி.சி.பட்டி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

அந்த புகாரில் கிராம பெண்களை தவறாக பேசி வீடியோ வெளியிட்ட நபர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும், டிக்டாக் வீடியோ செய்த இரண்டு பெண்களையும் ஊரை விட்டு வெளியேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர். இது குறித்து தெரிவித்துள்ள அக்கிராம மக்கள், டிக் டாக் வீடியோ வெளியிட்ட பெண்களின் தனிப்பட்ட பிரச்னைக்காக கிராம பெண்கள் அனைவரையும் தவறாக பேசுவது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, டிக் டாக் வெளியிட்ட இரண்டு பெண்கள் மட்டும் அவர்களின் குடும்பத்தினரை அக்கிராம மக்கள் ஊரை விட்டு தள்ளி வைத்ததாக கூறப்படுகிறது. ஊர்மக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.