சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள் பலத்த பாதுகாப்புடன் வீட்டிற்கு சென்றனர்.
சசிகலாவின் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்களுக்குச் சொந்தமாக தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருக்கும் இடங்களில் கடந்த 9ம் தேதி முதல் 13ம் தேதி வரை வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக சசிகலாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.
நீண்டநேர சோதனைக்கு பின்னர் வருமான வரித்துறை அதிகாரிகள் அனைவரும் காரில், நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்திற்குச் சென்றனர். அங்கு அவர்கள் அனைவரும் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.
இந்நிலையில், போயஸ் தோட்டத்தில் சோதனை நடைபெற்றபோது அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் குவிந்தனர். சிறிது பதற்றமான சூழல் நிலவியதால் காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர். இதன் காரணமாக, சோதனை நடத்திய அதிகாரிகள் வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.