பத்திரிகைகளில் படித்ததையும், கேள்விபட்டதையும் வைத்தே பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ள நிலையில், பெரியார் பேரணி நடத்திய அந்த காலக் கட்டத்தில் துக்ளக் இதழிலும், மற்ற பத்திரிகைகளில் வெளியான செய்திகள் என்ன? என்பதை தெரிந்து கொள்வோம்.
சேலத்தில் பெரியார் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியை துக்ளக் பத்திரிகை மட்டுமே தைரியமாக விமர்சித்ததாக நடிகர் ரஜினிகாந்த் கூறியிருந்த நிலையில், அந்த காலக் கட்டத்தில் வெளியான துக்ளக் இதழ் நமது புதிய தலைமுறைக்கு கிடைத்துள்ளது.
பெரியார் நடத்திய அந்தப் பேரணி தொடர்பாக, 1971-ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ஆம் தேதியிட்டு துக்ளக் இதழ் வெளியாகி இருந்தது. இந்து கடவுள்களின் உருவம் பொறிக்கப்பட்ட வாகனங்களின் புகைப்படங்களும், ராமர் சிலைக்கு அவமரியாதை செய்யப்படுவதாக குறிப்பிட்டு ஒரு புகைப்படமும் அந்த இதழில் வெளியிடப்பட்டது. மேலும், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற தலைப்பிட்டு, இதுபோன்ற ஊர்வலத்தை வேறு எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நடத்த அனுமதிக்க மாட்டார்கள் என அப்போதைய திமுக ஆட்சியையும் விமர்சித்து செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இதனிடையே 1971-ஆம் ஆண்டு பேரணி நடந்த காலக்கட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்திலேயே இல்லை எனவும், துக்ளக் இதழில் மட்டுமே வெளியான செய்தியை வைத்து நடிகர் ரஜினிகாந்த் தவறான தகவலை மீண்டும் மீண்டும் தெரிவிப்பதாகவும் கூறுகிறார் அந்த பேரணியின்போது செய்தி சேகரிக்கச் சென்ற அப்போதைய செய்தியாளர் திருவேங்கடம்.
இதனிடையே பெரியார் பேரணி நடத்திய காலத்தில் வெளியான இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழை அரசியல் விமர்சகர் சுமந்த் சி.ராமன் தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த நாளிதழ் செய்தியில் இந்துகளை புண்படுத்தும்படியாக எந்த நிகழ்வும் நடக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.