தமிழ்நாடு

சென்னையில் மாயமான 3 மாணவிகள்: 4 நாட்களாகியும் திரும்பாததால் பதற்றம்

Rasus

சென்னையில் நான்கு நாட்களுக்கு முன்னதாக காணாமல்போன 4 பெண்களில் ஒருவர் வீடு திரும்பியுள்ளார். மற்ற 3 மாணவிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சென்னை குரோம்பேட்டை ஏழுமலை நகரில் வசித்து வருபவர் கிருஷ்ண மூர்த்தி (வயது 62).இவருடைய பேத்தி வினோதினி. கல்லூரி மாணவியான இவர் இரண்டாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 24ம் தேதி கல்லூரிக்குச் சென்ற மாணவி இன்னும் வீடு திரும்பவில்லை. இதுதொடர்பாக சிட்லபாக்கம் காவல்நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  மாயமான மாணவியின் நண்பர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுக்கு விவரம் தெரியாததால் மாணவியை கண்டுபிடிப்பதில் சிக்கல் நிலவுகிறது.

தாம்பரத்தை அடுத்த சேலையூர் ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் சண்முகம் (76) ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. இவரது பேத்தி 11ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 24ம் தேதி தனது தோழியுடன் விளையாட சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவரது தோழியிடம் விசாரிக்க சென்றுள்ளார் அவரது தாத்தா.  ஆனால் அங்கு அந்தப் பெண்ணும் இல்லை. இதனையடுத்து இருவரும் மாயமானது தெரியவந்துள்ளது. பள்ளி மாணவிகள் மாயமானது தொடர்பாக சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 4 நாட்களாக ஆகியும் மாணவிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இதனிடையே சிட்லபாக்கம் பாலமுருகன் நகரில் வசித்து வரும் சரவணனின் மனைவியும் கடந்த 24ம் தேதி காணாமல்போனார். இந்நிலையில் நேற்று அவர் வீடு திரும்பிவிட்டார். போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், ‘எங்கே போனேன் என்று எனக்கே தெரியவில்லை’ என அப்பெண் கூறியுள்ளார். தன்னை யாரும் கடத்தி செல்லவில்லை எனவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

கல்லூரி மாணவி ஒருவரும், பள்ளி மாணவிகள் இருவரும் 4 நாட்களாக இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் போலீசார் அவர்களை தீவிரமாக தேடிவருகின்றனர்.