தமிழ்நாடு

யானை உயிரிழந்த விவகாரத்தில் விவசாயி கைது; மூவர் அதிரடி பணியிடை நீக்கம்

யானை உயிரிழந்த விவகாரத்தில் விவசாயி கைது; மூவர் அதிரடி பணியிடை நீக்கம்

நிவேதா ஜெகராஜா

இரு தினங்களுக்கு முன், பாலக்கோடு அருகே மின்விளக்கு வயரிலிருந்து மின்சாரம் தாக்கியதில் மக்னா யானை இறந்திருந்தது. அந்த விபத்துக்கு காரணமான விவசாயி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் பணியில் கவனக்குறைவாக இருந்த வனச்சரகர் உட்பட வனத் துறையினர் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த நல்லாம்பட்டி கிராமத்தில், யானையொன்று கடந்த இரு தினங்களுக்கு முன் இரவு நேரத்தில் உணவு தேடி விவசாய நிலத்திற்கு சென்றுள்ளது. அப்போது நெல் வயலில் அமைக்கப்பட்டிருந்த மின்விளக்கின் வயரிலிருந்து மின்சாரம் பாய்ந்து, அந்த மக்னா யானை (கொம்பு இல்லாத ஆண் யானை) உயிரிழந்தது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பாலக்கோடு வனத் துறையினர் பிரேத பரிசோதனை செய்து யானை உடலை அடக்கம் செய்தனர்.



இதனைத்தொடர்ந்து மக்னா யானை உயிரிழப்பு குறித்து பாலக்கோடு வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டார். மேலும் வனப் பகுதியை ஒட்டியுள்ள பகுதியில், வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில், உரிய அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக வயல்வெளியில் மின்வேலி மற்றும் மின் விளக்கு அமைத்த விவசாயி சீனிவாசனை, மாரண்டஹள்ளி காவல் துறையினர் கைது செய்தனர்.

\

மேலும் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலப்பகுதிகளில், விலங்குகளின் பாதுகாப்பை கண்காணிக்கும் பணியில் இருந்த, பாலக்கோடு வனசரகர் செல்வம், வனவர் கணபதி, வனக்காப்பாளர் கல்யாணசுந்தரம் ஆகிய மூன்று பேரை மண்டல வன பாதுகாவலர் பெரியசாமி தற்காலி பணி இடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

- விவேகானந்தன்