கொரோனா வந்து விடுமோ என்ற பயத்தில் ஒரே குடும்பத்தில் மூவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமுல்லைவாயில் சோழம்பேடு சாலை பகுதியை சேர்ந்தவர் டில்லி (74), அவரது மனைவி மல்லிகேஸ்வரி (64) மற்றும் மகள் நாகேஸ்வரி (34) ஆகிய மூவரும் அதே பகுதியில் வசித்து வந்தனர். டில்லி, முத்தா புதுப்பேட்டையை அடுத்துள்ள பாலவெட்டில் விவசாயம் பார்த்து வந்தார். தற்போது வேலை எதுவும் இல்லாததால் வருமானமின்றி இருந்துள்ளார்.
மகள் நாகேஸ்வரிக்கு கடந்த 2013- ஆம் ஆண்டு திருமணம் செய்து கொடுத்த ஒரு மாதத்தில் பிரிந்து வீட்டுக்கு வந்துள்ளார். அந்த வழக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்தில் முடிந்ததாக கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தினர் மனவேதனையில் இருந்து வந்துள்ளனர். இதற்கிடையில் கடந்த ஒருவார காலமாக மூவருக்கும் காய்ச்சல் இருந்துள்ளது.
அப்போது அருகில் இருந்த மருத்துவமனைக்கு சென்றும் மருந்துக் கடைகளில், மருந்து வாங்கி சாப்பிட்டும் வந்துள்ளனர். இந்நிலையில், காய்ச்சல் அதிகமானதால் கொரோனா வந்து விடுமோ என்ற அச்சத்தில் நேற்று இரவு மூவரும் தனித்தனியாக புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மல்லிகேஸ்வரியின் அண்ணன் வெங்கட்ராமன் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த திருமுல்லைவாயல் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கே.எம்.சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.