திருச்சி மாவட்டம் நவலூர்குட்டப்பட்டு அருகே, அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.
விவசாயியான ராமமூர்த்தி, மகன் குணசேகரன், தாய் ஒப்பாயி அம்மாளுடன், வயலுக்கு உரமிடுவதற்காக சென்றுள்ளார். அங்கு அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த ராமமூர்த்தி, மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடியுள்ளார். அவரை காப்பாற்ற முயற்சித்தபோது, குணசேகரனும், ஒப்பாயி அம்மாளும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அங்கு இரு மின்கம்பங்களுக்கு இடையே இருந்த மின்கம்பி விழுந்ததே விபத்துக்கு காரணம் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மின்கம்பி அறுந்து வயலுக்குள் விழுந்து கிடந்ததாகவும் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் இறந்தவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.