தமிழ்நாடு

கொடைக்கானலில் பார்ட்டி- போதையில் ஆட்டம், பாட்டம்; 200 பேரை மடக்கி பிடித்த போலீசார்..!

கொடைக்கானலில் பார்ட்டி- போதையில் ஆட்டம், பாட்டம்; 200 பேரை மடக்கி பிடித்த போலீசார்..!

webteam

கொடைக்கானலில் போதைப்பொருட்களை பயன்படுத்தி கேளிக்கையில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோரை மடக்கிப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தின் முக்கிய சுற்றுலாவுக்கான இடங்களில் ஒன்று கொடைக்கானல். இங்கு தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தவர்கள், வெளிநாட்டினர் என பல்வேறு இடங்களில் இருந்தும் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் சமூக வலைத்தளம் மூலம் 200-க்கும் மேற்பட்டோர், கொடைக்கானல் மேல்மலை கிராமம் கூக்கால் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், போதையுடன் கூடிய இரவு நேர பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருப்பதாக தென் மண்டல காவல் தலைவர் சண்முக ராஜேஸ்வரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மூன்று துணைக் க‌ண்காணிப்பாள‌ர் த‌லைமையில் ஏராளமான போலீசார் அப்பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பார்ட்டியில் ஈடுபட்டிருந்த 200-க்கும் மேற்பட்டோர் போதைக் காளான், கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளை வாங்கி வந்து உபயோகப்படுத்தியது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களை தடுப்பு காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.