எத்தகைய சூழலையும் எதிர்கொள்ள முப்படைகளும் தயாராக இருக்கின்றன என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
வராஹா அதிநவீன ரோந்துக் கப்பலை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்ப்பணித்தார். சென்னையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், இந்திய கடலோர காவல்படை தலைமை இயக்குனர் நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையடுத்து பேசிய ராஜ்நாத் சிங், வாராஹா ரோந்து கப்பல் மூலம் இந்திய கடலோர காவல்படைக்கு கூடுதல் பலம் சேரும் என்றார். 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் இது போன்ற கப்பல்கள் தயார் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார். போதை பொருள் கடத்தல், எல்லை தாண்டி ஊடுருவல் போன்றவற்றை தடுக்க அண்டை நாடுகளுடன் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து வராஹா ரோந்து கப்பலை ராஜ்நாத் சிங் பார்வையிட்டார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசும்போது, பாகிஸ்தானில் உள்ள பாலாகோட்டில் பயங்கரவாதிகள் முகாம்கள் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளதை சுட்டிக்காட்டி, எத்தகைய சூழலையும் எதிர்கொள்ள முப்படைகளும் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.