தமிழ்நாடு

“அநாகரிகமாக சோதனை செய்தார்கள்”- எல்ஜிபிடி பார்ட்டியில் போலீஸ் அத்துமீறல்..?

“அநாகரிகமாக சோதனை செய்தார்கள்”- எல்ஜிபிடி பார்ட்டியில் போலீஸ் அத்துமீறல்..?

webteam

சென்னையில் எல்ஜிபிடி சமுதாயத்தினர் ஹோட்டல் ஒன்றில் நடத்திய பார்ட்டியில் போலீசார் அத்துமீறி அவர்களிடம் நடந்ததாக புகார் எழுந்துள்ளது.

சமீபத்தில் உச்சநீதிமன்றம் ஒரு அதிரடி தீர்ப்பை வழங்கியிருந்தது. அதாவது ஒருபால் ஈர்ப்பு குற்றமல்ல என்றும் அதற்கு எதிரான சட்டப்பிரிவு 377-ஐ ரத்து செய்வதாகவும் அறிவித்தது. இதனை எல்ஜிபிடி சமுதாயத்தினர் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். பல்வேறு இடங்களில் எல்ஜிபிடி சமுதாய மக்கள் இனிப்புகளை வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனிடையே சென்னையில் கடந்த சில மாதங்களுக்கு முன் எல்ஜிபிடி சமுதாயத்தினர் நடத்திய பார்ட்டி ஒன்றில் போலீசார் அவர்களிடம் அத்துமீறி நடந்ததாக தற்போது புகார் எழுந்துள்ளது.

கடந்த மே மாதம் 12-ஆம் தேதி தங்களுக்கு நிகழ்ந்த கொடுமையான அனுபவங்கள் பற்றி பார்ட்டியில் பங்கேற்ற ஒருவர் கூறும்போது, “இரவு 12.15 மணி வரை எல்லாம் நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது. ஆனால் 12.15 மணிக்கு பின் போதைப்பொருள் சோதனை எனக் கூறிக்கொண்டு பல போலீசார் உள்ளே நுழைந்தனர். பார்ட்டியில் பங்கேற்ற எல்லோருடைய மொபைல் போன்களையும் அவர்கள் வாங்கிக் கொண்டனர். பின்னர் அறையில் தேடிய அவர்கள் 25 கிராம் அளவிலான உலர்ந்த ஆல்கஹாலை கண்டுபிடித்தனர். அதனையே தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திய அவர்கள் அனைவரையும் தனித்தனியாக சோதனை செய்ய வேண்டும் என்றார்கள். சிலரை அனைவரின் முன்னிலையிலும் தங்களது ஆடைகளை களைய சொன்னார்கள். அதற்கு மறுப்பு தெரிவித்தவர்களை தகாத வார்த்தைகளால் திட்டினார்கள். 

இதனிடையே எந்தவொரு கைது வாரண்டுடனும் அவர்கள் வரவில்லை. பார்ட்டியில் பங்கேற்றவர்களில் சிலர் இன்னும் பாலியல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளாதவர்கள். அவர்களிடம் அதுகுறித்தும் மோசமான வார்த்தைகளால் கேள்வி கேட்டு காயப்படுத்தினர். சிலரின் அங்கங்கள் குறித்தும் அநாகரிகமாக கேட்டு மனதை துன்புறச் செய்தனர். பார்ட்டியில் பங்கேற்றவர்களில் பலர் முன்னணி நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள். இது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வருவதற்கு முன் நடைபெற்ற சம்பவம். எனவே வெளியில் இதுகுறித்து சொல்ல பலரும் பயந்தனர். அங்கு எங்கள் அனைவரின் தனிப்பட்ட உரிமைகள் மீறப்பட்டிருக்கிறது” என்றார்.

தற்போது சட்டப்பிரிவு 377 ரத்து செய்யப்பட்டுள்ளதால் எல்ஜிபிடி சமுதாயத்தினர் இதுகுறித்து மாநில தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் கொடுக்க திட்டமிட்டுள்ளனர். 

இந்த விவகாரத்தை உற்றுநோக்கி கவனித்துவரும் வழக்கறிஞர் அருண்குமார் இதுபற்றி பேசும்போது, “சோதனைக்காக வந்தவர்கள் போதைப்பொருள் தடுப்பு பிரிவை சேர்ந்தவர்கள் என்று கூறியுள்ளார்கள். நாங்கள் மேற்கொண்ட விசாரித்தபோது வந்தவர்களில் சிலர் கிண்டி மற்றும் தி.நகர் காவல்நிலைய போலீசார். அவர்கள் ஏன் இங்கு வர வேண்டும்” எனக் கூறினார். இதுகுறித்து ஐபிஎஸ் அதிகாரி அரவிந்தனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது சம்பந்தப்பட்ட நாளில் சோதனை நடைபெற்றதை உறுதி செய்துள்ளார். இருப்பினும் ஆடைகள் களையப்பட்டது போன்ற விஷயங்களை முதலில் மறுத்த அவர் பின்னர் இந்த விஷயம் கருத்தில் கொள்ளப்படும் எனவும் கூறியுள்ளார்.

Courtesy: TheNewsMinute