டங்ஸ்டன் கனிம சுரங்கத் திட்டத்தை மத்திய அரசு முழுமையாக கைவிட வலியுறுத்தி முல்லை பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் பேரணி அறிவிக்கப்பட்டிருந்தது. நரசிங்கம்பட்டியில் பெருமாள் மலையில் இருந்து நடைபயண பேரணியாக கிளம்ப முயன்றனர். அவர்களை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் தடுத்து நிறுத்தினர். ஆனால், பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு நடைபயணம் தொடங்கினர்.
அவர்களை மாங்குளம் பிரிவில் தடுத்து நிறுத்த முயன்றபோது அங்கு போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தடையை மீறி பேரணியாக சென்ற நிலையில் வெள்ளரிப்பட்டி சிக்னல் அருகில் இரும்பு தடுப்புகள் மூலமாக காவல்துறையினர் மீண்டும் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர். அங்கு நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. தொடர்ந்து, பொதுமக்கள் வாகனங்களில் பேரணியாக தமுக்கம் மைதானத்துக்கு வந்தனர். வழியில் போராட்டக்காரர்களுக்கு குளிர்பானங்கள், உணவுகளை வழங்கி மக்கள் உற்சாகப்படுத்தினர். 9 மணிக்கு கிளம்பிய பேரணி, மதுரை தமுக்கம் மைதானத்திற்கு 5 மணி நேரம் பயணப்பட்டு இரண்டு முப்பது மணிக்கு மேல் மதுரைக்குள் வந்து சேர்ந்தனர்.
தொடர்ந்து மதுரை தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட அனுமதி மறுத்து போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். காவல்துறையினருக்கும் பொது மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், தமுக்கம் மைதானம் பிரதான சாலையில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தடுப்புகளை தூக்கி வீசி காவல்துறையினரோடு வாக்குவாதம் செய்த பொதுமக்கள், மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். தலைமை தபால் நிலையத்திற்கு செல்ல விவசாய சங்கம் மற்றும் மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் ஆர்ப்பாட்டம் நடத்திய பின்பு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்கத்தை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும், மதுரை மேலூர் பகுதியை தமிழ் பண்பாட்டு மண்டலமாக, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் விவசாய சங்க பிரதிநிதிகளும் கேட்டுக் கொண்டனர்.