தமிழ்நாடு

தாய்லாந்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்: உடனடியாக மீட்க கோரிக்கை

தாய்லாந்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்: உடனடியாக மீட்க கோரிக்கை

webteam

தாய்லாந்தில் 200க்கும் மேற்பட்ட தமிழர்கள் உட்பட 1000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். அவர்கள் தங்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாய்லாந்தில் சிக்கித் தவிக்கும் பல்வேறு தமிழர்கள் வீடியோ மூலம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதில், கீதா என்பவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “நான் தமிழ்நாட்டை சேர்ந்தவர். இப்போது தாய்லாந்தில் சிக்கிக்கொண்டு தாய்நாடு திரும்ப முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறேன். இந்தியவில் ஊரடங்கு அறிவித்தவுடன் என்னமாதிரி கிட்டத்தட்ட 1000 பேர் தாய்லாந்தில் சிக்கிக்கொண்டு இருக்கிறார்கள். அதில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் 200க்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறோம். மாணவரகள், வேலைக்கு வந்தவர்கள், சுற்றுலாவுக்காக வந்தவர்கள், கர்ப்பிணி பெண்கள் என எல்லாரும் இங்கே மாட்டியிருக்கிறோம். பேங்காங்கில் இருந்து சென்னை வர விமான அனுமதி தமிழக அரசு கொடுக்க வேண்டும். 2 மாதத்திற்கு மேல் இங்கு இருக்கிறோம். பொருளாதார ரீதியாகவும் சிக்கலாக இருக்கிறது. ரொம்ப மன உளைச்சலுக்கும் ஆளாகி இருக்கிறோம். நாடு திரும்ப உதவ வேண்டும் எனபதை கோரிக்கையாக வைக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் வெளியிட்ட வீடியோவில், “நாங்கள் தாய்லாந்தில் சிக்கியிருக்கிறோம். ஊர்ல இருந்து வந்து இங்கே வேலை பார்த்துக்கொண்டிருந்தோம். ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் கடந்த 2 மாதமாக எங்களுக்கு வேலை இல்லை. சாப்பிட கூட காசு இல்லாமல் கஷ்டப்படுகிறோம். குழந்தைகள், வயதானவர்கள் என பல தரப்பினரும் மாட்டியிருக்கிறார்கள். நாங்கள் சொந்த ஊர் திரும்ப தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். விமானத்தை ஏற்பாடு செய்து எங்களை மீட்க உதவ வேண்டும்.” என கோரிக்கை விடுத்துள்ளார்.