ஹெல்மெட் அணியாதவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் ரூ. 100 லிருந்து ரூ. 1000 ஆக விரைவில் உயர்த்தப்படும் எனப் போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
பாராளுமன்றத்தில் மோட்டார் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி தலைக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் ரூ. 100 லிருந்து ரூ. 1000 ஆக விரைவில் உயர்த்தப்படும் எனப் போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. ஹெல்மெட் அணியாமல் 90 சதவீத இளைஞர்கள் விபத்துகளில் சிக்குவதாகவும் அந்த விபத்துகளை தடுக்க பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
அதில் முதல் கட்டமாக ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களுக்கு ரூ. 1000 அபராதம் விரைவில் நடைமுறைக்கு வரும் எனவும் வாகனத்தின் பின்னால் அமர்ந்து செல்பவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் எனவும் போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
உயிர் காக்கும் ஹெல்மெட் அணிவதையும் கட்டாய பழக்கமாகக் கொள்ள வேண்டும் எனவும் செல்போன் போல ஹெல்மெட்டையும் தவறாமல் எடுத்து செல்வது கட்டயாம் எனவும் போலீஸ் அறிவுரை கூறியுள்ளது. இருசக்கர வாகனத்தை எவ்வளவு தூரம் ஓட்டி சென்றாலும் ஹெல்மெட் அணிய வேண்டியது அவசியம் எனவும் குழந்தைகளை பள்ளிகளுக்கு அழைத்து செல்லும்போதும் சந்தைக்கு செல்லும்போதும் ஹெல்மெட் கட்டாயம் எனவும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.