புதுச்சேரியில் உள்ள கனகன் ஏரியில் ஆயிரக்கணக்கான மீன்கள் திடீரென செத்து மிதப்பதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அருகே உள்ள கனகன் ஏரியில் கடந்த மாதம் ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. அப்போது ஏரி நீரும், மீன்களும் ஆய்வுக்கு எடுத்துச்செல்லப்பட்டன. இந்நிலையில், மீண்டும் இதே ஏரியில் ஏராளமான ஜிலேபி மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதால் ஏரியை சுற்றி வசிக்கும் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட ஆய்வில், ஏரியில் உள்ள தண்ணீரில் ஆக்சிஜன் குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. ஏரியில் மருத்துவக்கழிவுகள், ரசாயன கழிவுகள் கொட்டப்படுகின்றனவா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்துவருகிறார்கள். மேலும் கழிவுநீர் கலக்கப்படுகின்றதா எனவும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.