தமிழ்நாடு

மனு கொடுக்க திரண்ட ஆயிரக்கணக்கான பட்டாசு தொழிலாளர்கள்

மனு கொடுக்க திரண்ட ஆயிரக்கணக்கான பட்டாசு தொழிலாளர்கள்

webteam

பட்டாசு தொழிலை பாதுகாக்கக்கோரி விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் முன் திரண்டு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மனு கொடுத்தனர்.

பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு ஏற்படுவதாக தொடரப்பட்ட வழக்கில், பட்டாசு தயாரிப்பதற்கு சில நிபந்தனைகளை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. பட்டாசு தொழில் நடைமுறைக்கு சாத்தியமற்ற அந்த விதிகளை தளர்த்தக்கோரி, விருதுநகரில் பட்டாசு ஆலை உரிமையாளர்கள், கடந்த 42 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக விருதுநகர் மாவட்டம் முழுவதிலும் உள்ள ஆயிரத்து 100க்கும் மேற்பட்ட ஆலைகளில் இருந்து, சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர். 

பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த தொழிலாளர்கள் ஆட்சியர் அலுவலகத்தின் முன் திரண்டு போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்தனர். இவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு ஆகியோரும் இணைந்து கொண்டனர். இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் சிவஞானம் பட்டாசு தொழிலாளர்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார், அதன்பின், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பட்டாசு ஆலை உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.