தமிழ்நாடு

“எடப்பாடி முதல்வராக காரணமாக இருந்ததே நாங்கள்தான்” - தோப்பு வெங்கடாசலம் வேதனை

“எடப்பாடி முதல்வராக காரணமாக இருந்ததே நாங்கள்தான்” - தோப்பு வெங்கடாசலம் வேதனை

webteam

தனது கட்சிக்குள் இருப்பவர்கள் தனக்கு எதிராக செயல்படுவதாக பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் தோப்பு வெங்கடாசலம் குற்றம்சாட்டியுள்ளார்.

பெருந்துறை தொகுதியின் அதிமுக பொறுப்புகளிலிருந்து விலகுவதாக தோப்பு வெங்கடாசலம் தெரிவித்தார். இதனால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இந்நிலையில் இன்று பெருந்துறையில் செய்தியாளர்களிடம் விளக்கமளித்த அவர், தனது கட்சிக்குள் இருப்பவர்கள் தனக்கு எதிராக செயல்படுவதாக குற்றஞ்சாட்டினார். 

பதவி விலகியதற்காக அவர் கூறிய காரணங்கள் :

“ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் குடிநீரை சுத்திகரித்து வழங்கும் ஆலையை கொண்டு வரத்திட்டமிட்டேன். அது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தத் திட்டத்திற்கு தற்போது உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டு வேலை மும்முரமாக நடைபெற்றது. ஆனால் திடீரென மாவட்ட வருவாய் அதிகாரி இடத்திற்கு பாதையில்லை என நிராகரித்தார். 20 நாட்கள் தாமதப்படுத்தப்பட்டு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டது. இதை நான் கட்சித் தலைமைக்கு கொண்டு சென்றேன்.

மக்களவைத் தேர்தலின் போது, பெருந்துறை பேருந்து நிலையம் அருகே எதிர்க்கட்சியினர் பணப்பட்டுவாடா செய்வதாக எனக்கு தகவல் வந்தது. உடனே எனது கட்சியினரை அனுப்பி கையும், களவுமாக பிடித்தோம். பிடிபட்டவர்களில் ஒரு அரசு அலுவலர். அவர்களை கைது செய்தாலும், ஒரு மணி நேரத்திலேயே காவல்துறையினர் விடுவித்தனர். இதுதொடர்பாக நான் கேட்ட போது, உங்கள் கட்சியில் ஒரு முக்கிய நபரே விடுதலை செய்ய சொன்னதாக தெரிவித்தனர். கட்சிக்குள்ளேயே இப்படி துரோகம் நடப்பது மனதிற்கு வருத்தமாக இருந்தது. இதையும் முதலமைச்சர் கவனித்திற்கு கொண்டு சென்றேன். 

நான் பெருந்துறைக்கு தேர்தல் பொறுப்பாளராக மீண்டும் நியமிக்கப்பட்டேன். நான் செயல்வீரர்கள் கூட்டம் நடத்தியபோது, அரசு மருத்துவமனைக்கு எதிராக எங்கள் கட்சியினரே 700 பேர் கூடி பட்டாசுகளை வெடித்து தொந்தரவு கொடுத்தனர். அவப்பெயரை ஏற்படுத்த நினைத்தனர். 

சிஃப்காட்டில் பணிபுரியும் தொழிலாளர்களில் பெரும்பாலும் நோய்வாய்ப்படுபவர்கள் திருப்பூர், பெருந்துறையில்தான் உள்ளனர். அவர்கள் சிகிச்சை பெற சென்னை, பாண்டிச்சேரி செல்ல வேண்டியுள்ளது. இதனால் எய்ம்ஸ் மருத்துவமனையை பெருந்துறைக்கு கொண்டுவர வேண்டும் என்றேன். அனைத்து வசதிகளும் இருந்தாலும் எனது கோரிக்கை நிராகரிப்பட்டது. அதுவும் எனக்கு வேதனைதான். அதிமுகவிலிருந்து வேறு கட்சிக்கு செல்வதாக என்னப்பற்றி செய்தி வெளியானது. அப்படியெல்லாம் இல்லை. நான் இங்கேதான் இருப்பேன்.

எட்டுக்கு எட்டு தொகுதிகளை வென்றுகொடுத்து எடப்பாடி ஆட்சிக்கு முக்கிய காரணமாக இருப்பதே ஈரோடு மாவட்டம்தான். நான் மக்களுக்கும், மக்கள் பணிக்கு உதவ வேண்டும் என்றுதான் எனது புகார்களை முதலமைச்சரிடம் கொடுத்தேன்” என்று தெரிவித்தார்.