தமிழ்நாடு

“பொறுப்பு அதிகாரி இல்லை.. எனவே சுடச் சொன்னேன்” - ஆய்வாளரின் பகீர் வாக்குமூலம்

webteam

ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தில் 13 பேர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திரேஸ்புரம், FCI ரவுண்டானா ஆகிய இடங்களில் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் திரேஸ்புரம் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டதாக துணை  வட்டாட்சியர்கள் புகாரில் தெரிவித்திருந்தனர். 

தூத்துக்குடி பைபாஸ் ரோட்டில் உள்ள ரவுண்டான அருகிலும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நிலையில் அதற்கு உத்தரவிட்டது யார் என்ற சந்தேகம் இருந்தது. இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டவர் அளித்த புகார்  மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. ஒட்டப்பிடாரம் காவல் ஆய்வாளர் மீனாட்சி நாதன் என்பவர் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது என தெரியவந்துள்ளது. மீனாட்சி நாதன் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் “144 தடை உத்தரவு போடப்பட்டு தீவிர கண்காணிப்பில் இருந்ததாக கூறியுள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்தவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்திய பின்பு அங்கிருந்து திரும்பியவர்கள், அரிவாள் கம்பு, பொட்ரோல்பாம்ப் ஆகியவற்றோடு வந்து பணியில் இருந்த காவலர்களை தாக்கி , குடோனில் நுழைய முயன்றனர். அப்போது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரால் நியமிக்கப்பட்ட அதிகாரி அங்கு இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

“பொறுப்பு அதிகாரியாக இருந்த நான் வன்முறையை கட்டுப்படுத்தும் விதமாக ஒலிப்பெருக்கியில் கலைந்து செல்லுங்கள், இது சட்டவிரோதம் என கூறினேன். ஆனால் கூட்டம் கலையாததால் கண்ணீர் புகைக்குண்டு, லத்தி, ரப்பர் தோட்டாக்கள் பயன்படுத்தினோம். துப்பாக்கி பிரயோகம் இல்லாமல் கலைய மாட்டார்கள் என்ற நிலை உருவானதால் எச்சரிக்கும் விதமாக வானத்தை நோக்கி 2 முறை காவலர் சுட்டார். போராட்டக்காரர்கள் அதனையும் மீறி வந்ததால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர்” என்று தனது வாக்குமூலத்தில் மீனாட்சிநாதன் கூறியுள்ளார். 

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் திரேஸ்புரம் பகுதியில் துணை வட்டாட்சியர்கள் உத்தரவிட்டது சர்ச்சையை எழுப்பிய நிலையில் தற்போது காவல் ஆய்வாளர் ஒருவரும் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது தெரிய வந்துள்ளது.