தமிழ்நாடு

முடிவுக்கு வந்த 19 வருட சொத்துகுவிப்பு வழக்கு! அமைச்சர் கீதா ஜீவன் விடுவிக்கப்பட்ட பின்னணி

webteam

அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடப்பட்ட வழக்கில் இருந்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் மாநகர மேயர் ஜெகன் உட்பட  ஆறு பேரை விடுவித்தது தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் குற்றஞ்சாட்டி அமைச்சர் கீதா ஜீவன், அவரது கணவர் ஜீவன், தாய் எபனேசரம்மாள் மற்றும் சகோதரர்கள் மேயர் ஜெகன், பெரியசாமி, ராஜா ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்கில் இருந்து அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம்.

வழக்கின் பின்னணி...

கடந்த 1996-2001ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சுமார் 2 கோடியே 31 லட்ச ரூபாய் சொத்து சேர்த்ததாக அப்போதைய தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினராகவும் திமுக மாவட்ட செயலாளராக இருந்த பெரியசாமி, அவரது மனைவி எபனேசரம்மாள், பெரியசாமியின் மகன்கள் ராஜா மற்றும் தற்போது தூத்துக்குடி மாநகராட்சி மேயராக இருக்கும் ஜெகன் பெரியசாமி, தற்போது அமைச்சராக இருக்கும் கீதா ஜீவன், அவரது கணவர் ஜேக்கப் ஜீவன் ஆகியோர் மீது கடந்த 2003 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் திருநெல்வேலி லஞ்ச ஊழல் மற்றும் தடுப்பு பிரிவை  சேர்ந்த டிஎஸ்பி பேரில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை சுமார் 19 ஆண்டு காலமாக நடந்து வந்த நிலையில், திமுக மாவட்ட செயலாளராக இருந்த பெரியசாமி இடையிலேயே மரணம் அடைந்து விட அமைச்சர் கீதா ஜீவன், மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட ஐந்து பேர் இன்று தூத்துக்குடி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகினர். தீர்ப்பை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி குருமூர்த்தி வழங்கினார். இதன்படி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் கீதா ஜீவன் உள்ளிட்ட 5 பேரும் விடுதலை செய்யப்படுவதாக தீர்ப்பளித்தார்.

விடுதலை குறித்து அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களிடம் கூறும்போது. “1996 முதல் 2001 வரை திமுக ஆட்சிக்காலத்தில் எங்கள் தந்தை பெரியசாமி தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எங்கள் தந்தை உட்பட குடும்பத்தினர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு நியாயம் கிடைத்துள்ளது. நீதி வென்றுள்ளது” என தெரிவித்தார்.