திடீரென தீப்பற்றி எரிந்த சிலிண்டர் pt desk
தமிழ்நாடு

தூத்துக்குடி | அரசுப் பள்ளியில் காலை உணவு தயாரித்த போது திடீரென தீப்பற்றி எரிந்த சிலிண்டர்!

எட்டயபுரம் அருகே அரசு தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டத்தின் கீழ் உணவு தயார் செய்த போது சிலிண்டரின் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

PT WEB

செய்தியாளர்: மணிசங்கர்

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே அயன்ராசாபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் கைலாசபுரம். இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்குள்ள வளாகத்தில் காலை உணவு திட்டத்தில் உணவு தயாரிக்கும் பணியில் கனகவள்ளி என்பவர் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், இன்று காலை பள்ளிக்கு வந்த கனகவள்ளி வழக்கம் போல காலை உணவு தயார் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென சிலிண்டரில் தீப்பற்றி எரிந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த கனகவள்ளி அலறி அடித்துக் கொண்டு வெளியேறினார்.

இதையடுத்து ஒரு சிலிண்டரில் பிடித்த தீ, அருகில் இருந்த மற்றொரு சிலிண்டர் மற்றும் அங்கு வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்கள் மீது பிடித்து பற்றி எரிந்தது. தகவல் கிடைத்ததும் விளாத்திகுளம் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்தில் அங்கு வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்கள் மற்றும் உணவுப் பொருட்கள் முற்றிலுமாக எரிந்து நாசமானது.

இதுகுறித்து மாசர்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிலிண்டரில் ஏற்பட்ட லீகேஜ் காரணமாக தீப்பிடித்து எறிந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஊழியர் துரிதமாக செயல்பட்டு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்ததால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.