தமிழ்நாடு

அமித்ஷாவின் கருத்து சர்வாதிகாரமானது - திருமாவளவன்

Rasus

இந்தி குறித்த அமித் ஷா கருத்திற்கு, பெரும்பான்மை இருப்பதால் சர்வாதிகார முறையில் கருத்து தெரிவிப்பதாக தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இன்று இந்தி தினம் கொண்டாடப்படும் நிலையில் அமித்ஷா நாட்டு மக்களுக்கு வாழ்த்து மடலை வெளியிட்டுள்ளார். அதில் நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்றும் ஒரே மொழியாக இந்தி இருந்தால் இந்தியாவை உலக அரங்கில் அடையாளப்படுத்த முடியும் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் புதியதலைமுறைக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “ அமித்ஷா தற்போது கூறியிருப்பது புதிய கருத்தல்ல. அது அவர்களது நீண்ட கால கனவுதிட்டம். ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார் அமைப்பின் செயல்திட்டத்தை  ஒவ்வொன்றாக செயல்படுத்த முயற்சி செய்து வருகிறார்கள். அதில் ஒன்றுதான் ஒரே தேசம் ஒரே கலாச்சாரம் என்பது.

இதனை நடைமுறைப்படுத்தும் அளவிற்கு பெரும்பான்மை பலம் இருப்பதால் சர்வாதிகார முறையில் முடிவெடுத்து கருத்து தெரிவிக்கிறார்கள். இது இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்கும் வகையில் உள்ளது. இதனை அனுமதித்தால் இந்தியா மேலும் சில சிக்கலை சந்திக்க நேரிடுமே தவிர இந்தியாவை ஒருங்கிணைக்க முடியாது. இந்தியாவை இந்து தேசமாக்க வேண்டும் என்பதே இதன் நோக்கமே தவிர, இந்தியாவை உலக அரங்கில் உயர்த்த வேண்டும் என்பது பாரதிய ஜனதா ஆட்சியின் நோக்கமல்ல” எனத் தெரிவித்துள்ளார்.