தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து, கட்சிகள் இப்போதே கூட்டணிப் பற்றிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. மறுபுறம், கட்சி தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களும் நடத்தப்பட்டு நிர்வாகிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ”கட்சி நிர்வாகிகள் கட்டாயபடுத்தி தங்கள் ஏற்பாடு செய்துள்ள விழாக்களில் கலந்துகொள்ள வைப்பது மன அழுத்தத்தை தருகிறது” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை வேளச்சேரி தாய்மண் அலுவலகத்தில் இருந்து முகநூல் நேரலையின்போது இத்தகவலை அவர் தெரிவித்தார். அப்போது அவர், ”ஒருநாள்கூட எனக்கு ஓய்வு இல்லை; ஒரு மணி நேரம்கூட எனக்குத் தனிமை இல்லை. கட்சி நிர்வாகிகள் கட்டாயப்படுத்தி தங்கள் ஏற்பாடு செய்துள்ள விழாக்களில் கலந்துகொள்ள வைப்பது மன அழுத்தத்தைத் தருகிறது. நாள் கணக்கில், மணிக்கணக்கில் கிடையாய்க் கிடந்து அழுத்தம் கொடுத்து என்னை இழுத்துச் செல்வதால் கட்சிப் பணிகளை என்னால் மேற்கொள்ள முடியவில்லை” என அதில் தெரிவித்துள்ளார்.