தமிழ்நாடு

“சட்ட ஆலோசனைக்குப் பின் மறு வாக்குப்பதிவு?” - பொன்பரப்பி பற்றி திருமாவளவன்

webteam

அரியலூர் பொன்பரப்பி கிராமத்தில் மறுவாக்குப்பதிவு கோருவது தொடர்பாக சட்ட ஆலோசனைக்குப்பின் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் கொடூர தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளருமான திருமாவளவனின் பானை சின்னம் வரையப்பட்ட 20க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. இருச்சக்கர வாகனமும் தீக்கிரையாக்கப்பட்ட நிலையில், பெண் உள்பட 5க்கும் மேற்பட்டோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

வாக்குப்பதிவின்போது நடந்த தாக்குதல் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அரியலூர் மாவட்டம் தத்தனூரில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்று வந்தார். அங்கிருந்த கட்சி நிர்வாகிகளிடம் சம்பவம் தொடர்பாக விரிவாக கேட்டறிந்தார். 

பின்னர் அரியலூர் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான விஜயலட்சுமியைச் சந்தித்த திருமாவளவன், மோதல் நடந்த பொன்பரப்பி கிராமத்தில், 4 வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் நடத்த வேண்டுமெனெ கோரிக்கை விடுத்தார். அதற்கு  விஜயலட்சுமி மறுப்பு தெரிவித்துவிட்டதால், சட்ட ரீதியான ஆலோசனைக்குப்பின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திருமாவளவன் கூறியுள்ளார்.