தமிழ்நாடு

தீபாவளி பண்டிகை: சொந்த ஊர்களுக்கு எத்தனை லட்சம் பேர் செல்ல வாய்ப்பு? - அதிகாரிகள் கணிப்பு

webteam

தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழக அரசு சார்பில் இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளில் இந்தாண்டு 5 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாடு அரசு சார்பில் பண்டிகை காலத்தில் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் கடந்த காலத்தில் தீபாவளி பண்டிகையின்போது சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. கடந்த 2020-ம் ஆண்டு சென்னையில் இருந்து 8,753 பேருந்துகளில், 3 லட்சத்து 91 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர்.

அதேபோல் 2021-ம் ஆண்டு 9,472 அரசுப் பேருந்துகள் மூலமாக 4 லட்சத்து 8 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர். தற்போது இந்தாண்டு தீபாவளியை முன்னிட்டு இன்று காலை சென்னையில் இருந்து 5 மையத்தில் பேருந்துகள் இயக்கம் தொடங்கி இருக்கிறது. கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லி, கே.கே.நகர் மற்றும் மாதவரம் உள்ளிட்ட மையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இன்று மட்டும் வழக்கமாக இயக்கும் பேருந்துகள் உடன் சிறப்பு பேருந்துகள் உட்பட 3,537 பேருந்துகள் என தொடர்ந்து 3 நாட்களுக்கு 10,518 பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. தற்போது வரை 1 லட்சத்து 51 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதேபோல் கொரோனா தொற்றுக்குப் பிறகு இந்தாண்டு செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும், 5 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் செல்ல வாய்ப்பு என கூறுகின்றனர்.

அதேபோல் சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் 50-க்கும் மேற்பட்ட ரயில்களில் 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல இருக்கின்றனர்.