செய்தியாளர்: சு.சுந்தரமகேஷ்
தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு கடத்தப்படும் கனிம வள கொள்ளையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சியின் சார்பில் நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று கண்டன உரையாற்றினார். இதைத் தொடர்ந்து, தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இதையடுத்து சுரண்டை அருகே உள்ள மேலக்கலங்கல் கிராமத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் பங்கேற்றார் அங்கு பேசிய அவர்...
வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் தென்காசி சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளராக மருத்துவர் கௌஷிக் பாண்டியன் என்பவர் போட்டியிடுவார் என்று சீமான் அறிவித்தார். கடந்த 2023 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியில் அடிப்படை உறுப்பினரான இவர், அக்கட்சியின் மருத்துவர் பாசறை உறுப்பினராக உள்ளார். இவர், கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
குறிப்பாக, தேர்தலுக்கு இன்னும் ஒரு வருட காலம் உள்ள நிலையில் ஒரு வருட காலத்திற்கு முன்னதாகவே தென்காசி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.