நீடாமங்கலம் அருகே நண்பர்களுடன் ஆற்றில் குளித்துக் கொண்டடிருந்த மாணவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே தென்குவளைவேலி கிராமம் மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி என்பவரது மகன் லாரன்ஸ் (14). பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார் இவர், நேற்று மாலை லாரன்ஸ் தனது நண்பர்கள் 3 பேருடன் எருமைபடுகை என்னும் ஊரில் உள்ள நீர்த்தேக்கத்தில் குளித்துள்ளனர்.
அப்போது லாரன்ஸ் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் நேற்று இரவு வரை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதனிடையே இன்று காலை நீர்த்தேக்கம் அருகே லாரன்ஸ் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து உயிரிழந்த மாணவனின் உடலை கைப்பற்றிய அரித்துவாரமங்கலம் காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.