செய்தியாளர்: மாதவன்
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நிர்வாக சீர்கேடு காரணமாக நோயாளிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். திருவாரூர் அருகில் உள்ள மணக்கால் அய்யம்பேட்டை பகுதியில் இருந்து கலைராணி என்ற நோயாளி வயிற்றுவலி காரணமாக துடிதுடிக்க வந்துள்ளார். இதையடுத்து அவரை மருத்துவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். அப்போது அவருக்கு குளுக்கோஸ் பாட்டில் ஏற்ற டாக்டர்கள் பரித்துரைத்தனர்.
ஆனால், குளுக்கோஸ் பாட்டில் மாட்டிவிடும் ஸ்டேண்ட் பற்றாக்குறை காரணமாக அருகில் உள்ள வார்டுகளில் தேடிபார்த்தும் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து உடனடியாக மருத்துவர்கள் குளுக்கோஸ் ஸ்டேண்டுக்கு பதிலாக அங்கிருந்த நோயாளியின் பாதுகாவலர் ஒருவரை அழைத்து குளுக்கோஸ் பாட்டிலை அவர் கையில் கொடுத்து தூக்கிப் பிடித்துபடி நிற்கவைத்து குளுக்கோஸ் ஏற்றினர்.
இதுகுறித்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்ட பொழுது, அருகில் ஸ்டாண்ட் இருந்தது அதை எடுத்து வரும் வரை அந்த நபர் பாட்டிலை கையில் வைத்திருந்தார் எனவும், உடனடியாக ஸ்டாண்டில் குளுக்கோஸ் வைக்கப்பட்டு நோயாளிக்கு ஏற்றப்பட்டதாக தெரிவித்தனர்.