திருவாரூர் முதியவர்
திருவாரூர் முதியவர் PT
தமிழ்நாடு

திருவாரூர்: திருட வந்த கொள்ளையர்களை தீரமாய் நின்று எதிர்த்த 80 வயது முதியவர் - பொதுமக்கள் பாராட்டு

webteam

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தாலுகா வடகாடு பகுதியில் வசித்து வருபவர் வைரக்கண்ணு (80). இவருடைய ஒரு மகன் வெளிநாட்டில் வசித்துவரும் நிலையில், அவருடைய மனைவி மற்றொரு மகன் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில், வைரக்கண்ணு மற்றும் அவரது மருமகள் ஜெயலட்சுமி ஆகியோர் வீட்டில் இருந்துள்ளனர்.

Vairakannu

இந்நிலையில், நேற்றிரவு முகமூடி அணிந்தபடி ஆயுதங்களுடன் வைரக்கண்ணு வீட்டுற்கு வந்த நான்கு மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சத்தம் கேட்டவுடன் சுதாரித்துக் கொண்ட வைரகண்ணு, வெளியில் வந்து பார்த்துள்ளார். அவருடைய இருசக்கர வாகனம் கீழே விழுந்து கிடந்துள்ளது.

இதையடுத்து மறைந்திருந்த நான்கு நபர்களும் முதியவரின் குரல்வலையை நெரித்தபடி வாசலுக்கு இழுத்துச் சென்றுள்ளனர்.

என்ன ஆனாலும் ஆகட்டும் என முடிவு செய்த முதியவர், நால்வரையும் புரட்டி எடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து வீட்டில் வைத்திருந்த அருவாளை எடுத்துக் கொண்டு அந்த நால்வரையும் விரட்டியுள்ளார். அப்போது நல்வரும் பயந்து ஓடியுள்ளனர். பின்னர் இதுகுறித்து முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் வைரக்கண்ணு தெரிவித்துள்ளார் உடனடியாக களத்தில் இறங்கிய காவல் துறையினர் இரவோடு இரவாக பல இடங்களில் விசாரித்துள்ளனர்.

house

விசாரணையில் அந்த நான்கு பேரில் ஒருவர், சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே நாச்சிகுளம் என்ற ஊரில் உள்ள தேநீர் கடையில் டீ அருந்தியதும், அவர் தன்னுடைய தொலைபேசியில் பேசினால் காவல்துறையிடம் மாட்டிக் கொள்வோம் என்ற அச்சத்தில் டீக்கடை உரிமையாளரின் தொலைபேசியில் மற்ற மூன்று நபர்களையும் தொடர்பு கொண்டது காவல் துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து டீக்கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

இதையடுத்து திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கச்சனம் என்ற ஊரில் பதுங்கி இருந்த கார்த்திக் ராஜா, பிரவீன்குமார், சிவநேசன், ராஜேஷ் ஆகிய நால்வரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இரவு நேரத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நான்கு கொள்ளையர்களையும் காலையில் கைது செய்த காவல் துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வெகுவாக பாராட்டினார்.

arrest

கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 4 பேரையும் துணிச்சலோடு எதிர்த்துப் போராடி விரட்யடித்த முதியவரின் வீரத்தை பொதுமக்களும் வெகுவாக பாராட்டினார்கள்.