திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து 6-ஆவது நாளாக மழை பெய்து வருவதால், 20,000 ஏக்கர் பரப்பிலான சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் 6-ஆவது நாளாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று இரவு பெய்த கனமழையால் திருவாரூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்து உள்ளது. இந்நிலையில் நேற்று திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, குடவாசல், நன்னிலம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக 20,000 ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டிருந்த சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன.
இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் வயல்களில் தேங்கியுள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, கனமழையால் திருவாரூரில் 2,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நான்காவது நாளாக கடலுக்கு செல்லவில்லை. இதனால் தங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.