தமிழ்நாடு

திருவாரூர்: சுகாதரமின்றி செயல்படும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை- அவதிப்படும் பொதுமக்கள்

Sinekadhara

திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சுகாதாரம் இல்லாமல் இருப்பதால் நோயாளிகள் வேதனையில் உள்ளனர். 

திருவாரூர் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரியுடன் இணைந்து அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த அரசு மருத்துவமனைகளில் நாள் ஒன்றுக்கு 1500 புறநோயாளிகள் வந்து செல்கிறார்கள். அதேபோல இந்த மருத்துவமனையில் 800 உள்நோயாளிகள் மற்றும் கொரோனா சிகிச்சையில் சுமார் 120 நோயாளிகள் உள்ளனர்.

இந்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொது சிகிச்சை பிரிவு, எலும்பு முறிவு பிரிவு, முதியோர் பிரிவு, மகளிர் சிறப்புப் பிரிவு, குழந்தைகள் பிரிவு, இருதய சிறப்பு பிரிவு, நுரையீரல் சிறப்பு பிரிவு, கண் சிகிச்சை பிரிவு, பல சிகிச்சை பிரிவு மற்றும் மூளை நரம்பியல் சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல முக்கிய சிகிச்சை பிரிவுகள் இங்கு இயங்கி வருகின்றன. இந்த பிரிவுகளில் பல நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் மருத்துவமனை வளாகம் சுகாதாரம் இல்லாமல் இருப்பது பொதுமக்கள் மற்றும் நோயாளிகளுக்கு கவலை அளிக்கிறது. இவர்கள் மருத்துவமனையின் அவலநிலையைக் கண்டு முகம் சுளிக்கின்றனர். 

குறிப்பாக மருத்துவக் கழிவுகள் முறையாக அகற்றப்படாமல் ஆங்காங்கே இருக்கின்றன. அதிலும் குறிப்பாக இரத்தம் இருக்கும் சிரஞசிகள் உள்ளிட்ட கழிவுகள் மருத்துவமனை வளாகங்களில் ஆங்காங்கே கிடைக்கின்றன. மேலும் கழிவறைகள் பழுதடைந்துள்ளன. மருத்துவமனை வளாகத்தின் பின்புறம் மக்கள் நடந்துசெல்லும் பாதையில் கழிவுநீர் வெளியேறி வருகிறது. இது மேலும் நோய்த்தொற்று பரவும் அபாயத்தை ஏற்படுத்தும் என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது நாள்தோறும் மருத்துவக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தி கொண்டுதான் இருக்கிறோம்; சில நாட்களில் கழிவுகள் தாமதமாக வந்து எடுத்துச் செல்லப்படுகின்றன; மேலும் கழிவுநீரை முறையாக வெளியேற்ற டெண்டர் விடப்பட்டு விரைவில் கழிவுநீர் முழுவதுமாக வெளியேற்றப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.