அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு பயந்து திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தேர்தல் ரத்து செய்துவிட்டதாக அமமுக வேட்பாளர் எஸ்.காமராஜ் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசிய எஸ்.காமராஜ், “அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளும், டெபாசிட் பறிபோகும் அளவிற்கு அங்கு நிலைமை இருக்கிறது. இன்றைக்கு திமுக இந்த தேர்தலை எதிர்க்கிறது. அதிமுக எதிர்க்கிறது. இரண்டு கட்சிகளும் டிடிவி தினகரனை பார்த்து பயப்படுகின்றனர். அதுதான் தேர்தலை ஒத்திவைப்பதற்கு காரணம் என நாங்கள் எண்ணுகிறோம். இதே தேர்தல் ஆணையம் முன்னதாக தேர்தல் நடத்தலாம் என அறிவித்தது.
அது ஆட்சியரிடம் கலந்தாலோசித்து, தேர்தல் நடத்தும் சூழல் இருக்கிறது என்று தெரிந்த பின்னரே அறிவித்தது. தேர்தல் ஆணையம் அறிவித்த பிறகு தான் நாங்கள் வேட்பாளரை அறிவித்துள்ளோம். டிடிவி தினகரன் கஜா புயல் பாதித்த உடன் திருவாரூர் மாவட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி உதவிகளை செய்துள்ளார். இங்கே இருக்கும் மக்கள் தேர்தல் வேண்டாம் என விரும்பவில்லை. இங்கிருக்கும் அரசியல் கட்சிகள் தான் தேர்தல் வேண்டாம் என விரும்புகின்றனர்” என்றார்.
இதற்கு முன்னர், திருவாரூர் தொகுதியின் இடைத்தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அத்துடன் தேர்தல் பணிக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறும் தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதற்கு முன்னர், திருவாரூர் இடைத்தேர்தல் ஜனவரி 28ஆம் தேதி தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்ததும், இதனால் திமுக, அமமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.