செய்தியாளர்: புருஷோத்தமன்
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் தாலுகா, ஞானோதயம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரீட்டா (65). இவர் மகன் ஜான் சத்தியசீலனுடன் (45) கடந்த ஏப்ரல் மாதம் இருசக்கர வாகனத்தில் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு நோக்கி சென்றுள்ளார். அப்போது திருவண்ணாமலை பைபாஸ் அருகே வந்த போது பின்னால் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் மூதாட்டி ரீட்டா கழுத்தில் இருந்த 3 பவுன் செயினை பறித்துக் கொண்டு பைபாஸ் சாலை வழியாக மின்னல் வேகத்தில் தப்பினார்.
இதுகுறித்து ரீட்டா கொடுத்த புகாரின் பேரில் சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், கலசப்பாக்கம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவரது டூவீலர் பலமுறை செயின் பறிப்பு சம்பவ சிசிடிவி காட்சிகளில் பதிவாகி இருந்ததை அறிந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில் அவர் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தாலுகா, மாம்பாக்கம் கிராமத்தைச் சேரந்த மாயன் என்பவரின் மகன் சீனிவாசன் (30) என்பது தெரியவந்தது.
இதையடுத்து இவர், அனந்தபுரம், சாலவேடு, சேத்துப்பட்டு விழுப்புரம், ஆகிய பகுதிகளில் கடந்த ஜனவரி மாதம் முதல் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு மொத்தம் 8 பவுன் நகைகளை பறித்துச் சென்றது தெரியவந்தது இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்து 8 பவுன் நகைகளை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஒப்படைந்தனர். பின்னர், சீனிவாசனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.