தமிழ்நாடு

திருவண்ணாமலை: அடுத்தடுத்து ஏரியில் மூழ்கிய சகோதரிகள் - 3 சிறுமிகள் சடலமாக மீட்பு

திருவண்ணாமலை: அடுத்தடுத்து ஏரியில் மூழ்கிய சகோதரிகள் - 3 சிறுமிகள் சடலமாக மீட்பு

kaleelrahman

திருவண்ணாமலை அருகேயுள்ள கிராமத்தில் உள்ள ஏரியில் ஆட்டை குளிப்பாட்டச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா, தங்கை உட்பட மூன்று சிறுமிகள் ஏரியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருவண்ணாமலையை அடுத்துள்ள சு.கம்பப்பபட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மாபுக்கான். டேங்க் ஆப்ரேட்டராக பணிபுரிந்து வரும் இவருக்கு தில்ஷாத் என்ற மனைவியும் ஐந்து பெண் குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில், தில்ஷாத் அதே கிராமத்தில் கூலி வேலைக்கு சென்றுவிட வீட்டில் உள்ள ஆடுகளை குளிக்க வைக்க இரட்டைக் குழந்தைகளான நஸ்ரின், மற்றும் நசீமா, ஷாகிரா மற்றும் ஷப்ரின் ஆகிய 4 சிறுமிகளும் அதே கிராமத்தில் உள்ள ஏரிக்கரையோரம் சென்றுள்ளனர்.

அப்போது ஏரியில் தண்ணீர் குடிக்கச் சென்ற ஆடுகளை திருப்பி மேலே ஓட்டுவதற்காக சென்ற நஸ்ரின் ஏரியில் தவறி விழுந்துள்ளார். இதைக்கண்ட தங்கை நசீமா ஷாகிரா ஆகியோர் அவரை காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால், 3 பேருக்கும் நீச்சல் தெரியாததால் மூன்று பேரும் அடுத்தடுத்து நீரில் மூழ்கியுள்ளனர்,

இதையடுத்து மூன்று அக்காவும் ஏரி நீரில் மூழ்கியதை பார்த்த சப்ரின் ஓடிவந்து வீட்டில் உள்ளவர்களிடம் தகவல் தெரிவித்ததை அடுத்து கிராம மக்கள் ஒன்று சேர்ந்து ஏரி நீரில் மூழ்கிய மூன்று சிறுமிகளையும் சடலமாக மீட்டனர்.

தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த வெறையூர் காவல் துறையினர் சம்பவ 3 சிறுமிகளின் உடல்களை கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட எஸ்பி பவன்குமார் ரெட்டி நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.