திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பக்தர்கள் போதிய பேருந்து வசதி செய்யப்படவில்லை என சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, கிரிவலம் நேற்று தொடங்கி இன்று காலை வரை நடைபெற்றது. அதில் கலந்துகொள்வதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். கோவிலுக்குச் சென்ற பக்தர்கள் அனைவரும் ஒரே நேரத்தில், சொந்த ஊர் புறப்பட தயாரானதால், தற்காலிக பேருந்து நிலையங்களில் கூட்டம் அலைமோதியது.
சென்னை, விழுப்புரம் போன்ற இடங்களுக்கு போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை எனக் கூறி, மக்கள் மறியலில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் காத்திருத்தும் பேருந்தில் ஏற முடியாமல் தவித்த பக்தர்கள், ரயில் நிலையத்திற்கு படையெடுத்தனர். இதனால் ரயிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதைப் பயன்படுத்தி ஆட்டோக்கள் மற்றும் வாடகைக்கார்கள் அதிக பணம் வசூலித்ததாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.