மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் இருந்து திருப்பூர், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் திருச்சி ஆகிய நகரங்களுடன் புதுச்சேரியும் இடம் பெற்றுள்ளன.
ஸ்மார்ட் சிட்டி வளர்ச்சித் திட்டத்துக்கு தேர்வான 30 நகரங்கள் பட்டியலை டெல்லியில் மத்திய நகர்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு வெளியிட்டார். இந்த திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட உள்ள 30 நகரங்கள் பட்டியலில் கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரம் முதலிடம் பிடித்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தின் புதிய தலைநகரான நயா ராய்ப்பூர் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகிய 2 நகரங்களுமே இடம் பெற்றுள்ளன. அதேநேரம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தொகுதியில் உள்ள ரேபரேலி மற்றும் மீரட் ஆகிய நகரங்கள் இடம்பெறவில்லை. இந்த புதிய பட்டியலுடன் சேர்த்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக அறிவிக்கப்பட்ட நகரங்களின் பட்டியல் 90ஆக அதிகரித்துள்ளது. மொத்தமாக 40 நகரங்களை மத்திய அரசு இன்று அறிவிப்பதாக இருந்தது. ஆனால் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த நகரங்கள் மற்றும் மும்பை இந்த போட்டிக்கு விண்ணப்பிக்காததால் 30 நகரங்கள் மட்டுமே இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் தமிழகத்தில் இருந்து திருப்பூர், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் திருச்சி ஆகிய நகரங்களும், புதுச்சேரியும் இடம் பெற்றுள்ளன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் நகரங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.1,91,155 கோடி செலவிடப்பட உள்ளது.