தமிழ்நாடு

திருவள்ளூரில் இரண்டாவது முறையாக கரை ஒதுங்கிய ஆளில்லா விமானம் - போலீசார் விசாரணை

webteam

பழவேற்காடு அருகே மீனவ கிராமத்தில் மீண்டும் ஒரு ஆளில்லா குட்டி விமானம் கரை ஒதுங்கியதால் மீனவர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். திருப்பாலைவனம் காவல்துறையினர் அந்தக் குட்டி விமானத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அடுத்த கோரைக்குப்பம் பகுதியில் கடந்த 5-ஆம் தேதி ஆளில்லா குட்டி விமானம் கரை ஒதுங்கியது. அது உடைந்த நிலையில் இருந்ததைக் கண்ட அந்த பகுதி மீனவர்கள் இது குறித்து வருவாய்த் துறை மற்றும் காவல் துறைக்கு தகவல் அளித்தனர்.

அதன் பேரில் திருப்பாலைவனம் காவல் துறையினர் அங்கு சென்று அதனை பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர்.ஆளில்லா குட்டி விமானம் எதற்காக இந்த பகுதிக்கு வந்தது? எப்படி வந்தது? என்பது குறித்தெல்லாம் அவர்கள் விரிவான விசாரணை நடத்தி வந்தனர். குறிப்பாக பழவேற்காடு கலங்கரை விளக்கம், எண்ணூர் துறைமுகம், எல்என்டி துறைமுகம், வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளிட்ட மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் இருக்கும் இந்த பகுதியில் கடலில் ஆளில்லா குட்டி விமானம் விழுந்து இருப்பது சந்தேகத்தை எழுப்பியது.

உளவு பார்க்க அனுப்பப்பட்டதா என்ற கோணத்திலும் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த நிலையில், இன்று ஆந்திர விமானப்படையினர் அது தங்களுக்கு சொந்தமானது என கூறி திருப்பாலைவனம் காவல் நிலையத்தில் இருந்து அதனை திரும்பப் பெற்றுச் சென்றுள்ளனர்.

பயிற்சியின் போது இலக்கை நோக்கிச் சுட பயன்படுத்தப்பட்டது என்பது அவர்களுடைய அறிக்கை. அந்த வகையில் அதனை திரும்பப் பெற்று சென்ற நிலையில் தற்போது மீண்டும் பழவேற்காடு அடுத்த சாட்டாங்குப்பம் என்ற பகுதியில் ஆளில்லா குட்டி விமானம் கரை ஒதுங்கியது. இதுகுறித்து அந்த பகுதி மீனவர்கள் திருப்பாலைவனம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதின்பேரில், காவல் துறையினர் ஆளில்லா குட்டி விமானத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.