செய்தியாளர்: எழில்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் லிப்ட் ஆப்ரேட்டராக பீகாரைச் சேர்ந்த சுனில் குமார் மாத்தா (24) என்பவர் வேலை பார்த்து வருகிறார். இதே நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்ப்பவர் ஜெதீஷ் ஆனந்த் (37). இந்நிலையில், சுனில் குமார் மாத்தா துப்பாக்கியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக ஜெதீஷ் ஆனந்த், சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில் விரைந்து சென்ற காவல் துறையினர் துப்பாக்கியுடன் இருந்த சுனில் குமார மாத்தா மற்றும் அவரது தந்தை உபேந்திர மாத்தா (60) ஆகியோரை கைது செய்து ஒரு துப்பாக்கி மற்றும் ஒரு தோட்டாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 13-ஆம் தேதி லிப்ட் ஆபரேட்டர் சுனில் குமார் மாத்தாவை, மேற்பார்வையாளர் ஜெதீஷ் ஆனந்த் திட்டியதாகவும், அதற்காக துப்பாக்கியால் சுட வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து துப்பாக்கி எப்படி கிடைத்தது? எங்கிருந்து வாங்கப்பட்டது? என்பது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.