திருவள்ளூர் மாவட்டத்தில் 12வதாக ஆர்கே பேட்டை தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகா உதயமானது.
திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், திருத்தணி, ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி, மதுரவாயல், மாதவரம், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஊத்துக்கோட்டை மற்றும் பள்ளிப்பட்டு உள்ளிட்ட 11 தாலுகாக்கள் உள்ளன. இந்நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது பள்ளிப்பட்டு தாலுகாவை இரண்டாக பிரித்து ஆர்கே பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட புதிதாக ஒரு தாலுக்கா உருவாக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது.
பள்ளிப்பட்டு தாலுகாவில் 70 ஊராட்சிகளில் உள்ளடக்கிய தாலுக்காவாக செயல்பட்டு வருகிறது. இதில் ஆர்.கே பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற 40 முதல் 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பள்ளிப்பட்டு தாலுகா அலுவலகத்துக்கு சென்று நிறைவேற்ற வேண்டியிருந்தது.
இதையடுத்து பொதுமக்களின் பல ஆண்டுகள் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு ஆர்கே பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு 38 ஊராட்சிகளை உள்ளடக்கிய புதிய தாலுகாவை இன்று துவக்க உள்ளனர். பழைய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இந்த தாலுக்கா அலுவலகம் தற்காலிகமாக செயல்படும். கூடிய விரைவில் புதிய தாலுகா அலுவலக கட்டிடம் கட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆர்.கே.பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதி மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.