ஆட்சியர் pt desk
தமிழ்நாடு

திருவள்ளூர் | உங்களுக்கு அபராதம் விதிக்கலாமா?.. பணிகளை முடிக்காத ஒப்பந்ததாரரிடம் ஆட்சியர் கரார்!

மேம்பால பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பிரதாப், ஜனவரியில் முடிக்க வேண்டிய மேம்பாலத்தை மார்ச் வந்தும் முடிக்காததால் உங்களுக்கு அபராதம் விதித்தால் என்ன? என்று ஒப்பந்ததாரரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

PT WEB

செய்தியாளர்: எழில்;

திருவள்ளுார் ஆட்சியர் பிரதாப் இன்று பல்வேறு பகுதிகளில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது, சிறுவானூர் பகுதியில் உள்ள நியாய விலைக்கடையை ஆய்வு செய்தார். பொருட்கள் இருப்பில் அதிகமாகவும். கணக்கில் குறைவாகவும் உள்ளது என ஆட்சியர் எழுப்பிய கேள்விக்கு பெண் விற்பனையாளர் திருதிருவென விழித்தார்.

இதையடுத்து நெமிலி அகரம் பகுதியில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ₹13. 60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தை ஆய்வு செய்த ஆட்சியர், தரம் மற்றும் உயரம் உள்ளிட்டவைகளை சோதனை செய்ய எந்த உபகரணங்களும் எடுத்து வராத அதிகாரிகளை பார்த்து 'எதற்காக எந்த பொருட்களும் இல்லாமல் என் பின்னாலேயே வருகிறீர்கள், வெறும் கையை வீசிக்கொண்டு வருவதற்கு நீங்கள் எதற்கு? அதற்கு நானே பார்த்துக் கொண்டு வருவேனே' என அதிகாரிகளை விளாசினார்.

இதனையடுத்து, ஒப்பந்ததாரரை கம்பிகளின் தடிமன் மற்றும் உயரம் உள்ளிட்டவைகளை அளக்க சொல்லச் சென்ன ஆட்சியர், ஒப்பந்த காலம் முடிந்தும் இன்னும் பணிகள் முடிவடையாததால் 'உங்களுக்கு அபராதம் விதித்தால் என்ன?' என கேள்வி எழுப்பினார். அடுத்த முறை முதலமைச்சர் வருவதற்குள் இந்த மேம்பாலம் தயாராக இருக்க வேண்டும். இல்லையென்றால் உங்களை பிளாக் லிஸ்டில் போட்டு விடுவேன் என கோபமாக பேசினார்.

இதைத் தொடர்ந்து பூண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் மருந்தகத்தில் எவ்வளவு மருந்துகள் இருப்பு உள்ளது என ஆய்வு மேற்கொண்டார். அப்போது அனைத்தும் சரியாக தான் உள்ளதா அல்லது மாத்திரைகள் வெளியே எங்கேயும் விற்பனைக்கு செல்கிறதா என கேள்வி எழுப்பினார். இதையடுத்து வெளியே வந்த ஆட்சியர், கழிவறைகளை பார்த்து இந்த கழிவறைகள் ஏன் இப்படி உள்ளது உடனடியாக தூய்மைப்படுத்த வேண்டும் என மருத்துவமனை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.